நூறாண்டு வாழ்க்கை...?
நிருபர்: ஐயா, உங்கள் நீண்ட வயது வாழ்க்கையின் ரகசியம் என்ன?
பதில் :
உங்களுக்குத் தமிழ்வாணனைத் தெரியுமா?
50-60 வருடங்களுக்கு முன் தமிழில் துப்பறியும் கதைகள் எழுதுவதில் பெயர் போனவர்; "கல்கண்டு" பத்திரிகையின் சொந்தக்காரர் மற்றும் ஆசிரியர். (திரு லேனா தமிழ்வாணனின் தந்தை.)
பல அறிவு சார்ந்த புத்தகங்கள் எழுதியவர்.
அவர் "நூறு வயது வாழ்வது எப்படி?" என்று ஒரு புத்தகம் எழுதினார். "மாரடைப்பு வராமல் வாழ்வது எப்படி?" என்று மற்றொரு புத்தகமும் எழுதினார். அவர் ஏறக்குறைய தமது அறுபதாவது வயதில் மாரடைப்பினால் காலமானார்!
"மனிதனால் முன்மொழிய மட்டும்தான் முடியும்" (Man only proposes) என்பதற்கு ஒரு சான்றாக இதைச் சொன்னேன்.
பலரும் சொல்லாத ஒரு கருத்தை நான் உங்கள் முன் வைக்கிறேன்.
எதற்காக 100 வயது வாழ ஆசைப்பட வேண்டும்? அதனால் நாம் சாதிக்கப் போவது என்ன?
என்னைப் பொறுத்தவரை 60-70 வயது வரை வாழ்ந்தாலே போதும். மிகப் பெரும்பாலானவர்க்கு அதற்கு மேல் வாழும் வாழ்க்கையில் ஒரு பொருளும் இருப்பதில்லை. ஏன் அப்படிச் சொல்கிறேன்?
நாம் வேலை செய்தாயிற்று; சம்பாதித்தாயிற்று; குழந்தைகளை ஆளாக்கி அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உறுதி செய்தாயிற்று.நம்மால் நம் திறமையைக்கொண்டு அடைவேண்டிய உயரங்களையோ, பதவிகளையோ அடைந்தாயிற்று.நம் கண்முன்னே, நம் கவனத்திலேயே நம் உடல் தளருவதை, கண்கள் மங்குவதை, காது பலவீனமாவதை, மூளையின் சுறுசுறுப்பு குறைவதை, நினைவாற்றல் குறைவதை, திறமைகள் மங்குவதைக் கண்டுணர்ந்தாயிற்று.
அலுவலகத்தில் நமது மரியாதை குறைவதை, நமது வயதை விடக் குறைந்தவர்கள் திறமையோடு பணி செய்வதை, சில பல சமயங்களில் அவர்கள் நமக்கு மேலதிகாரிகள் ஆவதையும் கண்டயிற்று.காமம், இதர புலனின்பங்கள், பதவி, அதிகாரம், செல்வாக்கு, புகழ் -- இவற்றை அடைந்து அனுபவிக்கக் கொடுத்துவைத்திருந்தால் அவற்றை அடைந்தாயிற்று.
60 ஐக் கடந்து விட்டால், இனியும் இவற்றில் நிறைவேறாத ஆசைகள் இன்னும் இருக்குமானால், அவற்றை அடைந்து அனுபவிக்கக் கூடிய சக்தியோ, முயற்சிகளோ குறைந்து தளர்வுற்றாயிற்று.
ஓய்வாய் வீட்டில் வருமானம் இன்றி வெறுதே இருக்கையில் வீட்டிலும் மரியாதை குறைவதையும், அடுத்த தலைமுறைக்கு நம் வழிகாட்டலோ, உபதேசங்களோ தேவையில்லை என்கிற யதார்த்தமும் பெரும்பாலும் பலருக்கும் புரிந்தாயிற்று.ரத்தக் கொதிப்பு, சர்க்கரை வியாதி, மூச்சுத் திணறல், மாரில் சளி பிடித்தல், தளர் நடை, தலை சுற்றல், விழுந்து எலும்பு முறிவு, கொலெஸ்டிரால் -- இப்படி வயது ஆக ஆக வியாதிகள் வந்து பீடிக்கத் தொடங்குகின்றன.
75 -80 வயது ஆகிவிட்டாலோ சொந்தக் காலில் கம்பீரமாய் நிற்பது போய், அடுத்தவர்கள் தயவில் வாழ்வதும், அவர்களது அலட்சியம், ஏசல், அவமரியாதை இவற்றைத் தாங்கிக்கொள்ள வேண்டிய அவசியமும் வந்துவிடுகிறது.
80க்கு மேல் ஆகிவிட்டால், வாழ்க்கையில் நாம் எதை எதிர்பார்த்தாலும் அது அனேகமாக நடக்கப் போவதில்லை.
(நீங்கள் உடனே, நரேந்திர மோதி, கலைஞர் கருணாநிதி என்றெல்லாம் ஆரம்பிக்காதீர்கள்! அப்படிப்பட்டவர்கள் லட்சத்தில் ஒருவர் தான்)
ஆக, 100 வயது வாழவேண்டும் என்கிற ஆசையைத் துறந்துவிட்டு, முடிந்தவரை நாம் ஆரோக்கியமாகவும் மன நிம்மதியுடனும் மீதமுள்ள வாழ்க்கையை ஓட்டுவோம் என்றே நான் சொல்லுவேன்.
அதற்கு,
ஆகாரத்தைக் குறைப்போம். நாவின் சுவைக்கு அடிமையாவதைக் குறைப்போம். நடைப்பயிற்சி செய்வோம் யோகாசனங்கள் செய்வோம்.
மனதை இறைவனை நோக்கி, ஆன்மிகம் நோக்கித் திருப்புவோம்பொது நல சேவை செய்யும் வழிவகை இருந்தால் நம்மால் ஆனதை நம் சக்திக்கு உட்பட்டுச் செய்வோம்.
பொறுப்புகளை அடுத்த தலைமுறைக்கு விட்டுக் கொடுப்போம்.
விவேக வைராக்கியம் வளர்ப்போம்; பற்றுகளைக் குறைப்போம் அலைச்சல்களைக் குறைப்போம் ஆசைகளைக் குறைப்போம்; உபதேசங்களைக் குறைப்போம் மரியாதை, அவமரியாதை இரண்டையும் சமமாகக் காண முயலுவோம்
எப்போது யமன் நம்மைக் கூட்டிக்கொண்டு போக வருகிறானோ, அப்போது நாம் அச்சமின்றி, பற்றுக்களை விட்டு அவன் கூடக் கிளம்பும் மனநிலையை வளர்க்க முயலுவோம்.
எத்தனை வயது நமக்கு எழுதப்பட்டுள்ளது என்பது இறைவன் மட்டுமே அறிந்த உண்ஂமை. சில பல சமயங்களில், அதற்கும், ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளுக்கும் கூடச் சம்பந்தம் இருப்பதில்லை!
ஒரு நகைச்சுவைக் கதையோடு இந்த நீண்ட பதிலை நிறைவு செய்கிறேன்:
100 வயதைக் கடந்து ஆரோக்கியமாய் வாழும் ஒருவரைப் பேட்டி காண உள்ளூர் பத்திரிக்கையாளர் வந்தார். "ஐயா, உங்கள் நீண்ட வயது வாழ்க்கையின் ரகசியம் என்ன?" என்று கேட்டார்.
"அதுவா? நான் அசைவம் உண்டதில்லை;
கள், சாராயம் குடித்ததில்லை; போதைப் பொருள்களைக் கண்ணால் கண்டது கூட இல்லை; புகை பிடித்ததில்லை. தீய பெண் சகவாசம் என்றுமே இல்லை. முறையாய் யோகாசனம் செய்பவன் நான்..."
அப்போது அவர் வீட்டு மாடியிலிருந்து யாரோ பெரும் குரலில் இரைவதும், கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும், பொருட்களைத் தூக்கிப் போடும் ஒலிகளும் கேட்டன. திடுக்கிட்ட நிருபர், "ஐயா? மேலே என்ன கலாட்டா?" என்று கேட்டார்.
"அதுவா? என் அப்பன் செய்யும் கலாட்டாதான் இது.
தினம் தினம் குடித்துவிட்டு வந்து இதே பிரச்சனை தான்; ஆண்டுக் கணக்கில் இதையே பார்த்து எனக்கு வெறுத்துப் போகிறது!" என்றாராம் 100 வயதுக் கிழவர்!
No comments