CT

அண்மை பதிவுகள்

பழமொழிகள் || Tamil proverbs



நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ! (#23)



நாம் அறிந்த விளக்கம் :


நல்ல மனிதனாக இருந்தால் ஒரு தடவை சொன்னதுமே புரிஞ்சுகிட்டு நடந்துக்கணும், இந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல.


உண்மை விளக்கம் :


இங்கு சூடு எனும் சொல் சுவடு என வந்திருக்க வேண்டும். சந்தையில் மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம் சுவடு. அழுத்தமான சுவட்டை பதிக்கும் மாடே அதிக பலம் வாய்ந்தது. ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம் புலனாகும். இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.



எறும்பு ஊர கல்லும் தேயும் ! (#22)


விளக்கம்:

முயற்சி உடையவர்கள் முயற்சியை கைவிடாது தம் நோக்கத்தில் உறுதியாய் இருந்தால் வெற்றி இலக்கை நிச்சயம் அடைவார்கள் என்ற பொருளை உணர்த்துகிறது இந்த பழமொழி. கல் வலிமையானது. எறும்போ நுண்ணியது. கற்களின் வலிமைக்கு முன் எறும்பின் பலம் குறைவானதுதான். ஆனால் எறும்பு ஊர்ந்து ஊர்ந்து, தொடர்ந்து பயணிப்பதால் வலிமையான கல்லும் தேய்மானம் உண்டாகும். அதுபோலவே தொடர்ந்து முயற்சித்தால் மிகக் கடினமான செயலாக இருந்தாலும் எளிமையாக கூடி வரும் என்பதையே இந்த பழமொழி உணர்த்துகிறது





குப்பையில் கிடந்தாலும் குண்டுமணி நிறம் போகுமா ! (#21)


விளக்கம்:

எங்கிருந்தாலும் உயர்ந்த விஷயங்கள் உயர்ந்தவையகவே இருக்கும். இடத்தைப் பொருத்து அதன் தன்மையோ, தரமோ மாறாது என்பதற்காக சொல்லப்பட்ட விஷயம்தான் இது. ஆனால் இங்கு இந்த பழமொழியின் வடிவம் "குப்பையில் கிடந்தாலும் குன்றி மணி நிறம் போகுமா" என்று வரவேண்டும். இருப்பினும் குண்டுவோ, குன்றியோ இங்கு பழமொழியின் விளக்கம் மாறிப்போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



அகத்தி ஆயிரம் காய் காய்த்தாலும் புறத்தி புறத்தியே ! (#20)


விளக்கம்:

அகத்தியில் கீரையும், பூவும் தான் உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும். அதில் எவ்வளவு தான் காய் காய்த்தாலும் உணவுக்குப் பயன் படாததால் வீட்டினுள் எடுத்து செல்வதில்லை. தேவை இல்லாத ஒன்று எவ்வளவு தான் இருந்தாலும் அதனை யாரும் மதிக்க மாட்டார்கள் என்பது தான் இந்த பழமொழியின் உண்மை பொருள்.





ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் விளங்கவே விளங்காது ! (#19)



நாம் அறிந்த விளக்கம்:


ஆமை என்ற உயிரினம் வீட்டுக்குள் வந்து விட்டால் அந்த வீடு அழிவை நோக்கி போகும் அல்லது கெடுதல்கள் நிகழும். அமீனா என்பவர் நீதி மன்றத்தில் பணிபுரியும் சிப்பந்தி(டவாலி என்பார்கள்). நீதிமன்ற அறிக்கைகளை நம்மிடம் சேர்ப்பிப்பவர். வீடு ஏலம்,நகை ஏலம் மற்றும் ஏதேனும் வில்லங்க விவரங்களை வீட்டுக்கு அது தொடர்பான அதிகாரிகளுடன் கொண்டு வந்து அறிவிப்பவர். எனவே அவர் வீட்டுக்கு வந்தால் ஏதோ கெட்ட செய்திதான் கொண்டு வருவார் என்பதற்காக மேற்சொன்ன பழமொழி விளக்கம் தருகிறது.


உண்மை விளக்கம்:


இந்த பழமொழியில் ஆமை எனும் சொல் மூன்று விதமான ஆமைகளை உணர்த்துகிறது. கல்லாமை, இயலாமை, முயலாமை. அதாவது கல்வி இல்லாத, சோம்பேறித்தனம் கொண்ட, முயற்சிகளற்ற தன்மைகள் எந்த வீட்டில் உள்ளனவோ அந்த வீடு முன்னேறாது என்பதை இப்பழமொழி அறிவுறுத்துகிறது. அடுத்து இரண்டாம் பாதியாக உள்ள அமீனா புகுந்த வீடு என்பது ஒரு எதுகை மோனைக்காக சேர்க்கப்பட்டது இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.



தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது ! (#18)


விளக்கம்:

மகாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒரு தடவை கர்ணன் எய்த பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பாற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால் அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இதுவே இந்த பழமொழியின் விளக்கம் ஆகும்





முதலைக் கண்ணீர் வடிப்பது போல ! (#17)


விளக்கம்:

உண்மை வடிவம் "முதலை இழந்தவன் வடிக்கிற கண்ணீர் போல" அதாவது தொழிலில் முதலீடு செய்து இழப்பு ஏற்பட்டவன் வடிக்கும் கண்ணீருக்கு இந்த பழமொழி கூறப்பட்டது. இது நாளடைவில் திரிந்து "முதலைக் கண்ணீர் வடிப்பது போல" என்றானது. அதாவது அறிவியல் ரீதியாக முதலை கண்ணீர் வடிப்பதில்லை. அதனால் போலியான கண்ணீரைக் குறிக்கும் பொருட்டு இந்த பழமொழி கூறப்படுகிறது.





மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் ! (#16)



விளக்கம்:


பிள்ளைகள் வீட்டில் செய்த திண்பண்டங்களை வீட்டிற்கு வெளியில் அல்லது தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பெரியவர்கள் அவர்களை அதட்டி வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடுமாறு கூறுவார்கள். ஏனென்றால் யாராவது பார்த்தால் என்ன ஏதோ சாப்பிடுகிறான் என்று நினைத்துவிட்டாலே அந்த எண்ணம் பிள்ளைகளுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதனால் தான் மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் என்று கூறுவார்கள்.



தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம் ! (#15)



விளக்கம்:


ஒருவர் ஒரு தவறு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த தவறை சுட்டிக் காட்டவில்லை என்றாலும், வேறு ஒருவர் அந்த தவறை செய்திருப்பார். அதைபற்றி நாம் பேசினாலும் இவரைப் பற்றிதான் சொல்கிறோம் என்று சில நேரங்களில் சண்டைக்கு வருவதுண்டு. அதாவது வேறு விதமாக ஒருவர் ஒரு தண்டனை அனுபவிக்கிறார் என்றால், வேறொருவர் தான் செய்த வேறொரு தவறை நினைத்து பயப்படுவதை இந்த பழமொழியை உபயோகித்து கூறலாம்.





நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை ! (#14)


விளக்கம்:

பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ, பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும், சிக்கன குணமும்தான். அதாவது நீரை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதே அவர்களின் சிக்கன குணத்தை விள்க்கும். மேலும், உப்பு என்பது ஒரு உயிர் நாடி போன்றது. அதனை பாதுகாத்து, பயன்படுத்தும் மற்றும் கையாளும் முறையை வைத்து ஒரு பெண்ணின் குடும்ப நிர்வாகத் திறமையை (துப்பு) கண்டறியலாம்.



ஊருக்கு பொது, ஏரிக்கு மது ! (#13)


விளக்கம்:

ஏரியின் நீரில் தான் அதிக பயன்பாடு இருக்கும். மீன்கள் அதிகம் கிடைக்கக்கூடிய இடமும் அதுதான். அது ஊருக்குப் பொதுவானது. அதுபோல யாரவது மிகவும் ஏமாளியாக, ஊர் மக்கள் அனைவரிடமும் ஏமாறுபவராக இருந்தால், அவரை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம், தனக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை இந்த பழமொழி வைத்து குறிப்பிடுகிறது.





ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ ! (#12)


விளக்கம்:

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேனீர், காப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்ததே இந்த பழமொழியாகும்.





இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு, கொளுத்தவனுக்கு கொள்ளைக்கொடு ! (#11)


விளக்கம்:

எள்,கொள்ளு என்பவை இரண்டு உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால்,உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.



அஞ்சும் மூன்றும் உண்டானல் அறியாப்பெண்ணும்  சமைக்கும் ! (#10)


விளக்கம்:

ஐந்து என்பது ஐந்து வகையான சமையல் பொருட்களைக் குறிக்கும் மிளகு,உப்பு,கடுகு,தனியா மற்றும் புளி. மூன்று என்பது நீர்,நெருப்பு,விறகு. இது அனைத்தும் இருந்தால் சமையல் அறியாத பெண்கூட சமையல் கற்றுக் கொள்வாள் என்பது பொருள் ஆகும்.





உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு ! (#9)



விளக்கம்:


கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது. கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை எப்போதும் சீராக இருக்கும் என்பதே இதன் விளக்கம் ஆகும்.





இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது ! (#8)



நாம் அறிந்த விளக்கம்:


இமையின் குறைபடுகளை அதனுள் இருக்கும் கண்ணால் பார்க்க முடியாது. இது தான் நாம் அறிந்தது.


உண்மை விளக்கம்:


நம்முடைய மனம் நமக்குள் இருந்து எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டே இருக்கும் எப்போதும் நம்முடன் உறவாடிக் கொண்டிருந்தாலும், அதன் குற்றங்கள் நமக்குத் தெரிவதில்லை அதுபோல, தன் இமைக் குற்றம் கண்ணுக்குத் தோன்றாது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.





வர வர மாமியார் கழுதை போல் ஆனால் !(#7)



நாம் அறிந்த விளக்கம்:


மருமகளை எப்போதாவது அடி கழுதையே என மாமியார் குறிப்பிடுவதுண்டு. இதனால் மாமியார் ஒரு போதும் கழுதையாவதில்லை.அல்லது கழுதை கத்துவது போல மாமியார் மருமகளை பேசிக்கொண்டே இருப்பதாய் அறிந்திருபோம் இது உண்மை விளக்கம் அல்ல.


உண்மை விளக்கம்:


பழமொழியில் கழுதை என்பது கயிதை என வரவேண்டும். கயிதை என்பது ஊமத்தம்காயை குறிக்கும். ஊமத்தம்பூ அதன் ஆரம்ப பருவத்தில் மென்மையாய் வளர்ந்து அழகாய் பூத்து கடைசியில் காயில் கடின விஷ முள்ளாய் மாறி அவ்வபோது துன்புறுத்துவது போல மாமியார்கள் ஆரம்பகாலத்தில் அன்பாய் இருந்து பின் வம்பாய் வளர்ந்து கடைசியில் வேம்பாய் கசப்பது என்பது போல் வந்ததாலேயே இந்த பழமொழி தோன்றியது(வர வர மாமியார் கயிதை போல் ஆனால்).





போக்கத்தவனுக்கு போலிஸ்காரன் வேலை-வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை ! (#6)


நாம் அறிந்த விளக்கம்:

அதாவது சாதரணமாக படிக்கையில் போக்கிடம் இல்லாமல் வெட்டித்தனமாய் சுற்றுபவன் காவல்துறை வேலைக்கும் எந்த பின்புலமும்,செல்வமும் இல்லாதவன் வாத்தியார் வேலைக்கும் ஏற்றவர்கள் என்று எண்ணும்படி ஆகிவிட்டது.


உண்மை விளக்கம்:


வார்த்தையை சற்று பிரித்து பொருள்கொண்டோமேயானால் இதன் விளக்கத்தை எளிதாக அறிந்து கொள்ளலாம். போக்கத்தவன் = போக்கு + கற்றவன் அதாவது ஒழுங்குகளை கற்றவன் போலிஸ் வேலைக்கு தகுதியானவன். வாக்கத்தவன் = வாக்கு + கற்றவன் அதாவது வாக்கு என்பது சத்தியம், அறிவு என்றெல்லாம் பொருள்படும் மொத்தத்தில் படிப்பறிவில் சிறந்தவன் வாத்தியார் வேலைக்கு தகுதியானவன். இதை கொண்டே சொல்லப்பட்ட பழமொழி மருகி திரிந்து மேற்கண்ட முறையில் வந்துவிட்டது.





ஆறிலும் சாவு நூறிலும் சாவு ! (#5)



நாம் அறிந்த விளக்கம்:


மரணம் வருவதற்கு எந்த வயதும் ஒரு பொருட்டல்ல. ஆனால் இதன் உண்மை விளக்கம் இது அல்ல


உண்மை விளக்கம்:


இந்த பழமொழிக்கான சம்பவம் மகாபாரதத்திலிருந்து உதாரணம் காட்டப்படுகிறது. கர்ணணை குந்தி தேவி(போர் நிகழும்போது) தம் தார்மீக வாரிசுகளான பஞ்சபாண்டவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவியாக இருக்கும் கிருஷ்ணனுடன் சேர்ந்து கொள்ள வற்புறுத்துகிறாள். அதற்கு கர்ணன் இவர்கள் ஆறு பேருடன் இருந்தாலும் சரி அல்லது கௌரவ சகோதரர்கள் நூறு பேர்களுடன் இருந்தாலும் சரி மரணம் எனக்கு நிச்சயிக்கப்பட்ட ஒன்று. அதாவது "ஆறிலும் சாவு நூறிலும் சாவு" நான் செஞ்சோற்றுக் கடனுக்காக கௌரவர்களுடனே இருந்து செத்துப்போகிறேன் என்கிறான் கர்ணன். இதுவே இதன் விளக்கம் ஆகும்.





பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ ! (#4)



நாம் அறிந்த விளக்கம்:


ஒரு இடத்திற்கோ அல்லது விருந்திற்கோ செல்லும்போது சாப்பிடுவதற்கு முதல் வரிசையிலும், ஒரு போரில் கலந்து கொள்ளும்போது கடைசியில் கலந்து கொள்வது என்பதும் நாம் அறிந்தது.


உண்மை விளக்கம்:


இதன் உண்மை வடிவம் "பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும்" என்பதாகும். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளை பற்றி பாடி வைக்கையில், நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு போன்ற போர்க்கருவிகளை பயன்படுத்தும்போது நம் கை பின்னே போகும்(வில்-நான் இழுக்க) அதே கை உணவு உண்ணும் போது முன்னே போகும்.இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுதப்பட்டது.





கோத்திரம் அறிந்து பெண் கொடு பாத்திரம் அறிந்து பிச்சை இடு ! (#3)



நாம் அறிந்த விளக்கம்:


நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண்ணை மருமகளாக்கி கொள்வதற்கும் அல்லது நல்ல குடும்பமா என ஆராய்ந்து பெண் கொடுப்பதற்கும்,அடுத்து தானம் தந்தால் கூட அளவறிந்து பிச்சையிட வேண்டும் என்பதற்காகவும் பொருள் தரும்படி இருப்பதாக சிலர் கருதுகின்றனர்.


உண்மை விளக்கம்:


இது மன்னர் குடும்பத்திற்கு சொல்லப்பட்ட அறிவுரையாக அறியப்படுகிறது.கோ என்பது அரசன் எனப் பொருள்படும். திறம் என்பது திறன் அல்லது திறமை. அதாவது ஒரு அரசனாகப் பார்த்து ஆராய்ந்து மணமுடித்து தர வேண்டும் என்பதை இது குறிக்கிறது. கோத்திரம் என்பது கோத்திறம் வரவேண்டும். அதேபோல் பாத்திரம் என்பது பாத்திறம் என வரவேண்டும். புலவனுக்கு பரிசு அளிக்க நினைக்கும் மன்னன் அந்த புலவனது பாடல் திறமைக்கு ஏற்றவாறு பரிசுகளை மதிப்பிட்டு அளிக்க வேண்டும். இதுவே இதன் விளக்கம் ஆகும்.





அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்  (#2)



நாம் அறிந்த விளக்கம்:


வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு, அவ்விதமே இன்றுவரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது.


உண்மை விளக்கம்:


இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும் போது, எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோருக்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாக சொல்லப்பட்ட பழமொழி இது.





ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தா தன் பிள்ளை தானா வளரும் ! (#1)



நாம் அறிந்த விளக்கம்:


மற்றவர்களுக்கு நாம் செய்யும் நன்மையின் தன்மை, நம்மையும் நம் குடும்பத்தையும் அதே நன்மையின் தன்மை கொண்டு உயர்த்தும் என்பது நாம் அறிந்தது.


உண்மை விளக்கம்:


ஊரான் பிள்ளை என்பது தம் மனைவியை குறிக்கும். அவள் பிள்ளை சுமந்திருக்கும் காலத்தில் அவளை, அவள் கணவன் நல்ல முறையில் பராமரிப்பான் எனில் அம்மனைவி வயிற்றில் வளரும் அவனது குழந்தையும் ஆரோக்கியமாக நலமுடன் வளரும்.

No comments