வெறுமைக்கு நேரம் ஒதுக்குங்கள் || 1
(முதலில் உங்களை அவதானியுங்கள்.)
உள்ளது உள்ளபடியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் .
நம்முடைய அன்றாட வாழ்வில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதற்கு நமக்கு நேரமிருக்கிறதா ? பெரும்பாலான நபர்கள் , " அதற்குச் செலவிடுவதற்கு என்னிடம் ஒரு கணநேரம்கூட இல்லை , " என்றுதான் கூறுவர் .
நேரம் நமக்கு எப்போதும் தட்டுப்பாடாகத்தான் இருக்கிறது . நம்முடைய வேலையும் , நம் வாழ்க்கையிலுள்ள மற்ற அனைத்து விஷயங்களும் நம்மைத் திணறடித்துக் கொண்டிருக்கின்றன . நவீன வாழ்க்கைமுறையின் காரணமாக முன்பு எப்போதையும்விட இப்போது நாம் அதிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம் , சிறிதும் ஓய்வின்றி ஓடிக் கொண்டிருக்கிறோம் . எவையெல்லாம் செய்து முடிக்கப்பட வேண்டுமோ அவற்றைச் செய்ய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் நம்மால் முடிந்த அளவு சிறப்பாக நாம் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் .
அன்றாடம் இப்படிப்பட்ட வழக்கத்தில் நம்மை நாம் மூழ்கடித்துக் கொண்டிருக்கும்போது , நம்மை அறியாமலேயே நம்முடைய உண்மையான சுயத்தையும் மகிழ்ச்சியையும் நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் .
ஒரு நாளில் வெறும் பத்து நிமிடங்களை ஒதுக்குங்கள் . எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க நேரம் ஒதுக்குங்கள் . வெறுமைக்கு அந்த நேரத்தில் , உங்களைச் சுற்றியுள்ள விஷயங்களில் உங்கள் மனம் சிக்காமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் . உங்கள் மனத்தில் பல எண்ணங்கள் படையெடுத்து வரும் . அவற்றை ஒவ்வொன்றாக விரட்டியடியுங்கள் .
அப்படிச் செய்யும்போது , உங்களால் நிகழ்கணத்தை அவதானிக்க முடியும் ; உங்களை உயிர்த்துடிப்போடு வைத்திருக்கின்ற , இயற்கையில் நிகழ்கின்ற நுண்ணிய மாற்றங்களை உங்களால் உணர முடியும் . பிற விஷயங்களால் உங்களுடைய கவனம் சிதறடிக்கப்படாமல் இருக்கும்போது , உங்களுடைய தூய்மையான , நேர்மையான சுயம் வெளிப்படும்.
எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருக்க நேரம் ஒதுக்குவதுதான் ஓர் எளிய வாழ்க்கையை உருவாக்குவதை நோக்கி எடுத்து வைக்கப்படுகின்ற முதலடியாகும் .
No comments