மருதுபாண்டியர்
சிவகங்கைக்குப் பக்கத்துல ஏதோ ஒரு கிராமம்.
ஒருநாள் விடியற்காலை நேரம்.
ஒரு குதிரையிலே அவர் வந்துகிட்டிருக்கார்.
முதல் நாள் எதிரிகளோட போராடி அவர்கள் கையிலே
சிக்காம தப்பிச்சு வந்திருக்கார்.
யார் அவர்? மருதுபாண்டியர்.
பரோபகார சிந்தை – சிவபக்தி – புலவர்களை ஆதரிக்கிற
இயல்பு – குடிமக்களை தாய்போல காப்பாற்றக் கூடிய தகைமை.
இப்படியெல்லாம் இருந்தும் கடைசி காலத்துல
அவருக்கும் எதிரிகள். பலதடவை அவரை பிடிக்கறதுக்குப் பகைவர்கள் முயற்சி பண்ணினாங்க.
முடியலே.
ஒரு சமயம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோயிலுக்கு
எதிரே உள்ள ஒரு மண்டபத்துல இவர் தங்கியிருந்தார்.
அது எதிரிகளுக்குத் தெரிஞ்சி போச்சு. ஊர்
எல்லைக்கு அவங்க வந்துட்டாங்க –ங்கற சேதி இவருக்கு எட்டிச்சு.
உடனே ஒரு குதிரைக்காரனை கூட அழைச்சிட்டு
புறப்பட்டார். வலது கையிலே சிலந்தி உண்டாகி வேதனை குடுத்தது... அதுலே ஒரு கட்டுப்
போட்டுக்கிட்டு புறப்பட்டுட்டார்.
அப்படிப் புறப்பட்டுத்தான் மறுநாள் காலையிலே
அந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.
ஒரு கூரை வீடு... அதுக்கு முன்னாடி ஒரு வயசான
அம்மா கோலம் போட்டுக்கொண்டு இருந்தாங்க. அங்க போய் குதிரை நின்னுது. அந்த அம்மா
நிமிர்ந்து பார்த்தாங்க.
மருதுபாண்டியருடைய கம்பீரமான தோற்றம் அவங்க
மனசுலே அன்பை உண்டாக்கிச்சு.
யாரப்பா நீ... உனக்கு என்ன வேணும்? –ன்னு கேட்டாங்க.
அம்மா... எனக்கு பசியா இருக்கு... தாகமா
இருக்கு... ஏதாவது இருந்தா குடுங்களேன்! –னார்.
ராத்திரி தண்ணியிலே போட்டு வச்சிருக்கிற பழைய
சோறு இருக்கு... வா போடறேன் –னாங்க.
அம்மா! ராத்திரி பூர நான் தூங்கலே.. இங்க மறைவா ஒரு
இடம் கிடைச்சா குதிரைய கட்டிட்டு... தூங்கலாம்னு பார்க்கறேன் –னார்.
அந்த அம்மாவும் வீட்டுக்குப் பின்னாடி கொட்டகை
இருக்கு பயன்படுத்திக்கச் சொன்னாங்க... குதிரைக்கும் தீனி போட்டுடறேன்! –னாங்க.
மருதுபாண்டியருக்கு இந்த உதவி ரொம்ப பெரிசா
தெரிஞ்சுது..
அசந்து தூங்கினார்...
கண் விழிச்சப்போ சூரியன் உச்சியிலே இருந்தான்.
அந்த வீட்ல சாப்பிட்ட சாப்பாடும்... தூங்குன
தூக்கமும் உடம்புக்கும், மனசுக்கும் ஒரு புது உற்சாகத்தைக் கொடுத்தது.
அவங்க காட்டின அன்புக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும்
ஈடாகாது-ன்னு நினைச்சார்.
பிறகு... வீட்டுக் கூரையிலே இருந்து ஒரு பனை
ஓலையும் பக்கத்து வேலியிலிருந்து ஒரு முள்ளையும் எடுத்துக்கிட்டு வந்து அந்த கிராமம் பூராவும் அந்த அம்மாவுக்கே
சேர வேண்டியது-ன்னு எழுதி கையெழுத்துப்
போட்டார்.
முள்ளாலே எழுதிய அந்த சாசனத்தை அவங்ககிட்டே கொடுத்தார். “ “அம்மா! சிவகங்கை
சமஸ்தான அதிகாரிகள் கிட்டே இதை நீங்க கொடுத்தா உங்களுக்கு ஏதாவது அனுகூலம்
உண்டாகும்!” –ன்னு சொல்லிட்டு போயிட்டார்.
ஊர்லயிருந்து பிள்ளைங்க வந்ததும்... இதை
எடுத்துக்கிட்டுப் போய் சமஸ்தானத்துல காட்டலாம்னு நினைச்சாங்க. ஆனா அதுக்குள்ளே
பகைவர்கள் சமஸ்தானத்தைக் கைப்பற்றினதாக சேதி வந்தது.
மருதுபாண்டியரை... அதுக்கப்புறம் பகைவர்கள்
சிறையிலே அடைச்சுட்டாங்க... அவரோட கடைசி காலத்துல பகைவர்கள் அவர்கிட்டே கேட்டாங்க:
“உங்க கடைசி விருப்பம் என்ன சொல்லுங்க?” –ன்னு.
அப்போ அவர் சொன்னார்... “நான் யார் யாருக்கு
எந்தெந்த கிராமத்தை எழுதிக்கொடுத்தேனோ அதெல்லாம் அவர்களுக்கே சொந்தமாகனும். வேறே
ஒன்னும் இல்லே!” –ன்னார்.
இதைக்கேட்ட பகைவர்களும் அவர் வேண்டுதலுக்கு
மதிப்பளித்து அவரின் இறுதி ஆசைய நிறைவேத்தினாங்க.
மருதுபாண்டியரின் சாசனப்படி உரியவர்களுக்கு
அவரவர் கிராமங்கள் கிடைச்சுது.
அப்படி அந்த அம்மாவுக்கு கிடைச்ச கிராமம்தான் பழஞ்சோற்றுக்
குருநாதனேந்தல்.
இதை தமிழ் தாத்தா
உ.வே.சா ஒரு கட்டுரையிலே எழுதியிருக்கார்.
ஒரு ஆளு ராத்திரி நேரத்துல வந்து... “ஐயா நான்
வெளியூர்காரன். இன்னைக்கு ராத்திரி மட்டும் கொல்லைப்புறத்துல உள்ள கொட்டகையில் படுத்திருந்துட்டு
காலையிலே போயிடறேன்!” –னான்.
‘சரி’ –ன்னார் வீட்டுக்காரர். இவன்
விடியறதுக்குள்ளே அங்கே கட்டியிருந்தா குதிரையைத் திருடிக்கிட்டு அதுமேல ஏறி
தப்பிச்சுப் போயிட்டான்.
காலையிலே எழுந்திரிச்சுப் பார்த்தார்
வீட்டுக்காரர். அதிர்ச்சி அடையலே!
“ஏன் சார் உங்க குதிரை காணாம போனது உங்களுக்கு
வருத்தமா இல்லையானு கேட்டாங்க.
“இல்லே!” –ன்னார்.
ஏன்னா “காணாம போனது குதிரையே இல்லே. அது கழுதை
இருட்டுல தெரியாம ஓட்டிட்டு போயிட்டான். நானே அத யார் தலையில கட்டலாம்னு
பார்த்துகிட்டிருந்தேன்!” –அப்படிங்கறார்.
(மருதுபாண்டியர் மீது தேசத் துரோகம் குற்றம்
சாட்டிய பிரிட்டிஷ் ஏகாபத்தியம் 1801 ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி இன்றைய பசும்பொன் மாவட்டம்
திருப்பத்தூர் கோட்டையில் தூக்கிலிட்டது.)
தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.
No comments