CT

அண்மை பதிவுகள்

சாந்தி... சாந்தி... சாந்தி...



short stories

ஒரு பெரியவர்கிட்டே பேசிக்கிட்டிருந்தேன்.

அவர் சொன்னார்:

“ரெண்டு நல்லவனுக்கு மூணு வழி!

ஒரு நல்லவன் – ஒரு கெட்டவனுக்கு ரெண்டு வழி!

ரெண்டு கெட்டவனுக்கு ஒரே வழி!”

-அப்படின்னார். எனக்கு ஒண்ணும் புரியலே...

இதுக்கு என்னாங்க விளக்கம்? –ன்னேன்.

அதுக்கப்புறம் அவரு விளக்கம் கொடுத்தார்.

அதாவது... ஒரு ஒத்தையடி பாதையிலே எதிரும்புதிருமா ரெண்டுபேர் 
வந்துகிட்டிருக்காங்க. அது ஒரு வரப்புன்னு வச்சிக்குங்களேன். 

அவங்க ரெண்டு பெரும் பாதைய விட்டு விலகாமே நேரா வந்தா மோதிக்க வேண்டியதுதான்.

எதிரெதிர்ல வர ரெண்டு பேரும் நல்லவங்க-ன்னு வச்சிக்குங்களேன்...

அவரு என்ன பண்ணுவார். இவரு நேரா வரட்டும்னு அவரு வரப்பை விட்டு விலகி கீழே இறங்கி நடந்து வருவார்.

இவரு என்ன பண்ணுவார்... அவரு வரட்டுமேன்னு இவரும் விலகி கீழே இறங்கி நடந்து வருவார்.

ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க இவர் ஒரு பாதையிலும், அவர் ஒரு பாதையிலும் வர வரப்பு பாதையோடு சேர்த்து மூன்று பாதைகள் ஆனது.

அதுதான்... ரெண்டு நல்லவனுக்கு மூணு வழின்னு சொல்றது.

அடுத்து ஒரு நல்லவன், கெட்டவன் எதிரெதிரே வந்தா... நல்லவன் வரப்ப விட்டு கீழே இறங்கி எதிரே வரவனுக்கு வழி விட்டு போவான்.

கெட்டவன் வரப்ப விட்டு கீழ இறங்கமாட்டான், அவன் இறங்கட்டுமேனு இருந்துடுவான்.

இப்ப ரெண்டு பாதைதான் உண்டு.

இது தான் ஒரு நல்லவன் – ஒரு கெட்டவனுக்கு இரண்டு வழின்னு சொல்றது.

அடுத்து அந்த பாதையிலே எதிரெதிர வரவங்க இரண்டு பேரும் கெட்டவன்னு வச்சிக்குங்களேன் ரெண்டு பெரும் இறங்காம  ஒரே பாதையிலே வந்துட்டு இருப்பாங்க.

இதுதான் ரெண்டு கெட்டவனுக்கு ஒரே வழின்னு சொல்றது.


இப்பத்தான் அந்த பெரியவர் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் புரிஞ்சுது.

நமக்கு வர இடையூறுகள் மூணு வகை – ன்னார்.

அது எப்படின்னு கேட்டேன்.


நாம ஒரு காரியத்த தொடங்கறோம்ன்னு வச்சிக்குங்களேன்... அதுக்கு மூணு வகையான இடைஞ்சல் வரலாம்.

நம்மாலேயே வர்ற இடைஞ்சல் ஒரு வகை. இது ஆத்யாத்மிகம்!

நம்மைத்தவிர மத்தவங்களாலே வர்ற இடைஞ்சல் ஒரு வகை – இது ஆதிபௌதிகம்.

இயற்கையா வர்ற இடைஞ்சல் மூணாவது வகை.. அதுக்கு பேரு ஆதி-தெய்வீகம்
      
இப்படி மூணு வகையாவும் இடைஞ்சல் வரக்கூடாதுன்னுதான் 

பெரியவங்க சாந்தி – சாந்தி – சாந்தி ன்னு மூணு தடவை சொல்றாங்க. 

இந்த மூணு  இடைஞ்சலும் அமைதியா இருக்கணும்-ன்னு அர்த்தம்.


நமக்குப் பிடிச்ச ஒரு நல்ல சினிமா படத்தைப் பார்த்துக்கிட்டிருக்கோம்-ன்னு வச்சிக்குங்களேன்.

அந்த சமயம் பார்த்து நமக்கு வயத்த வலிக்குது...

இது நம்மகிட்டே இருந்தே வர்ற இடைஞ்சல்.

ஆர்வமா பார்த்துக்கிட்டிருக்கோம் அந்த சமயம் பார்த்து பக்கத்துல இருக்கவங்க சத்தமா பேசிக்கிட்டு இருக்காங்க   

இது வந்து... அடுத்தவங்களாலே வர்ற இடைஞ்சல்.

அந்த சமயம் பார்த்து இடி – மின்னல் – கரண்ட் போயிடுது...

இது இயற்கை உண்டுபண்ற இடைஞ்சல்.

ஓம் சாந்தி... சாந்தி... சாந்தி..!      


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.



No comments