CT

அண்மை பதிவுகள்

புகழ்ச்சி... ஒரு மருந்து...

tmailkaru stories




ஒரு பள்ளிக் கூடத்துக் குழந்தைங்க கிட்டே விஞ்ஞானப் பூர்வமா ஒரு சோதனை நடத்திப் பார்த்திருக்காங்க!

அதாவது அவங்களுக்கு ஒரு பரீட்சை வைச்சாங்க. பரீட்சை வைப்பதற்கு முன்னாடி அவர்களைப் பார்த்து...

நீங்கள்லாம் ரொம்ப புத்திசாலிகள்... ரொம்ப கெட்டிக்காரப் பிள்ளைங்க... உங்க கிட்ட நல்ல திறமை இருக்கு.

“இந்த பரீட்சை உங்களுக்கு ரொம்ப சுலபமாக இருக்கும்!” அப்படின்னு சொல்லி பரீட்சை எழுத அனுப்பினாங்க.

இந்த புகழ் உரையை கேட்டு அவங்க பரீட்சைஎழுதப் போனாங்க... எழுதுனாங்க!

சராசரிக்கும் மேலே இருந்தது அவங்க எழுதுனது! எல்லாருக்கும் நல்ல மார்க்!

அதே பள்ளிக் குழந்தைங்ககிட்ட இன்னொரு பரீட்சை வைச்சாங்க. அதுவும் முதல்லே வச்ச மாதிரி சுலபமான பரீட்சைதான்!... இருந்தாலும் பரீட்சை எழுத போறப்போ பிள்ளைங்களை பார்த்து...

‘இந்த பரீட்சை ரொம்ப கஷ்டமா இருக்கும்... இதை திறமையா எழுதற அளவுக்கு உங்களுக்கு புத்திசாலித்தனம் போதாது!’ அப்படின்னு ஆரம்பிச்சு அவங்க குறைகளையே சுட்டிக்காட்டி பேசி... பரீட்சைக்கு அனுப்பி வைத்தன.. இவங்க பரீட்சையை சரியவே எழுதலையாம்.. மார்க்கும் குறைந்து போச்சாம்!

இந்த வித்தியாசத்துக்கு என்ன கரணம் ?

புகழ்ச்சிதான். அவங்களை புகழ்ந்து பேசி அனுப்ச்சாங்க... அதிக மார்க்!

இவங்களை குறைகள் சுட்டிக்காட்டி பேசி அனுப்ச்சாங்க.. குறைச்சல் மார்க்!

‘புகழ்ச்சி –ங்கறது ஒரு அற்புதமான மருந்து’ – அப்படிங்கறாங்க நிபுணர்கள்..

இந்த புகழ்ச்சி மருந்தை சுலபமா மத்தவங்களுக்கு கொடுக்கலாம். இதுக்கு காசு ,பணம்  செலவு பண்ணத் தேவை இல்லை... ஆனா பலன் அதிகம்..!

ஆல்பிரெட் ஆட்லர் –ன்னு ஒரு மனவியல் நிபுணர். அவர் ஒரு டாக்டர். அவர் என்ன பண்ணுவாராம்...கவலை, பயம், கலக்கம்...இதுக்கெல்லாம் இரையான தன்னுடைய நோயாளிகள் கிட்டே போவாராம். அவர்களைப் பார்த்து சொல்வாராம்.

“நீங்கள்லாம் என்ன செய்யணும்னா.. யாரையாவது திருப்தி செய்யணும்... அல்லது யாருக்காவது மன மகிழ்ச்சியை உண்டாக்கணும்... அப்படின்னு தொடர்ந்து நினைச்சிக்கிட்டு இருங்க அப்படி இருந்தா 14 நாட்களிலே உங்கள் குறைபாடுகளெல்லாம் நீங்கிவிடும்”-ன்னு சொல்வாராம். அதே மாதிரி ஆயிடுமாம்.
   
வில்லியம் ஜேம்ஸ்- அமெரிக்க தத்துவஞானி –மனோ தத்துவ நிபுணர். அவர் என்ன சொல்றார் தெரியுமா?

மனித இயல்பின் ஆழமான தத்துவம் என்னவென்றால் பாராட்டைப் பெறுவதற்காக ஏங்குவதுதான்! ” – அப்படிங்கறார்.
இந்த ரகசியத்தை நாம புரிஞ்சுகிட்டா போதும் வாழ்க்கையிலே வெற்றியடையறது சுலபம்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த விவரங்கள் எல்லாம் எனக்கு வேண்டியப்பட்ட ஒருத்தர் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்.
உடனே அவர்... “சார்... நீங்க சொல்ற பிரகாரம் நடந்துக்கறதுக்கு இப்பவே ஆரம்பிச்சுடறேன்..!-ன்னு சொல்லிட்டு ஒரு பேப்பரையும் பேனாவையும் வச்சிக்கிட்டு எழுத ஆரம்பிச்சுட்டார்.
“என்ன எழுதறீங்க?” ன்னேன்.
‘பாராட்டுக் கடிதம் எழுதறேன்...
போன வாரம் இந்தப் பத்திரிகையிலே வந்த சிறுகதையை பாராட்டி எழுதறேன். கதாசிரியரைப் புகழ்ந்து நாலு வார்த்தை எழுதப் போறேன்!.-ன்னார்
கதாசிரியர் யாரு?- ன்னு கேட்டேன்.
அவர் மெதுவா கிட்டே வந்து என் காதோடு காதா ..
“நான் தான் சார் அது!” அப்படின்னார்.             


தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்களின் இன்று ஒரு தகவல் படைப்பிலிருந்து குறுந்தகவல்.


 

No comments